அமெரிக்கா - தாலிபான் இடையே அமைதி ஒப்பந்தம் கடந்த பிப்ரவரி மாதம் 29ஆம் தேதி கையெழுத்தானது. இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின் 2001ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானை படையெடுத்த அமெரிக்கா, அங்கிருந்த பயங்கரவாத அமைப்பான தாலிபான் ஆட்சியை நீக்கி புதிதாக ஜனநாயக அரசை நிறுவியது. இருப்பினும் அங்கு தாலிபானின் கட்டுப்பாட்டை தடுக்க அமெரிக்கா - நேட்டோ படையினர் ஆப்கானிஸ்தானில் பணியமர்த்தப்பட்டனர்.
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பின், ஆப்கானில் இருக்கும் அமெரிக்கப் படைகளை திரும்பப்பெறும் நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டார். அதன் விளைவாகவே அமெரிக்கா - தாலிபான் இடையே அமைதி ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிபர் ட்ரம்ப் படைகளை திரும்பப் பெறுவதில் தீவிரம் காட்டிவருகிறார்.