நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து மாகாணத்தில் காவல் துறையினர் வழக்கம்போல் போக்குவரத்தைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிந்தனர். அப்போது, அந்த வழியே வாகனத்தில் அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், சாலையில் நின்றுகொண்டிருந்த காவலர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.
இதில், பலத்த காயம் அடைந்த காவலர்கள் இரண்டு பேர், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
பாதுகாப்பு நடவடிக்கையாக அப்பகுதியில் இருக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதுடன், துப்பாக்கிச் சூடு நடைபெற்ற பகுதி முழுவதையும் காவல் துறையினர் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
கடந்தாண்டு ஜனவரி மாதம் கிறிஸ்ட்சர்ச் நகரில் அமைந்துள்ள மசூதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 51 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, நியூசிலாந்து புதிய துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்களை இயற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.