தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

தற்கொலைப்படை தாக்குதல்: நூலிழையில் உயிர்தப்பிய ஆப்கான் அதிபர் - taliban suicide bombing

காபூல்: ஆப்கானிஸ்தானில் தேர்தல் பரப்புரை கூட்டம் மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதலில் அந்நாட்டு அதிபர் அஷ்ரஃப் கானி நல்வாய்ப்பாக காயங்கள் ஏதுமின்றி உயிர்தப்பினார்.

Afghanistan president ashraf

By

Published : Sep 18, 2019, 7:41 AM IST

ஆப்கானிஸ்தான் நாட்டில் வரும் 28ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, அந்நாட்டு அதிபர் அஷ்ரஃப் கானி, பர்வான் மாகாணத்தின் தலைநகரான சரிகாரில் நேற்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது, வெடிகுண்டு பொருத்திய இருசக்கர வாகனத்துடன் பரப்புரை நடைபெறும் இடத்துக்கு வந்த தலிபான் பயங்கரவாதி ஒருவர் வெடிகுண்டை வெடிக்கச் செய்தார்.

இதில், ஆப்கானிஸ்தான் படையைச் சேர்ந்த நான்கு பாதுகாப்புப் படையினர் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்தத் தற்கொலைப்படை தாக்குதலில், ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கானி காயங்கள் ஏதுமின்றி நல்வாய்ப்பாக உயிர் தப்பியதாக ஆளும் கட்சியின் பரப்புரை செய்தித் தொடர்பாளர் ஹம்மெத் அசிஸ் தெரிவித்துள்ளார்.

காபூலில் இரண்டாவது தாக்குதல்

அதே சமயத்தில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பாதுகாப்பு அமைச்சகம், அமெரிக்கத் தூதரகம், நாட்டோ தலைமையகம் உள்ளிட்ட உயர்மட்ட அலுவலகங்கள் அமைந்திருக்கும் பாதுகாப்பு வளையத்துக்குள் தலிபான்கள் மற்றுமொரு வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.

இந்தத் தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர். 38 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தொடர் தாக்குதல்... அமைதி ஒப்பந்தத்தை நழுவவிட்ட தலிபான்கள்

அதிபர் தேர்தல் ஆப்கானிஸ்தான் நாட்டில் நடைபெறவுள்ள நிலையில் கடந்த ஒரு மாதமாக அங்கு தலிபான்கள் பல்வேறு வெடிகுண்டு தாக்குதல்களை அரங்கேற்றிவருகின்றனர்.

கடந்த ஜனவரி மாதம் தொடங்கி, தலிபான்கள் இதுவரை 256 தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இந்தத் தாக்குதல்களில் இதுவரை மூன்றாயிரத்து 932 பேர் கொல்லப்பட்டனர். மேலும், ஆறாயிரத்து 162 பேர் காயமடைந்தனர்.

ஆப்கானிஸ்தானில் நிலவிவரும் 18 ஆண்டு உள்நாட்டுப் போரை நிறுத்துவது தொடர்பாக கடந்த வாரம், தலிபான்களுடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கேம்ப் டேவிடில் ரகசிய அமைதிப் பேச்சுவார்த்தை மேற்கொள்ளவிருந்தார்.

இந்நிலையில், காபூலில் தலிபான்கள் மேற்கொண்ட வெடிகுண்டுத் தாக்குதலைக் காரணம்காட்டி அதிபர் ட்ரம்ப் அந்தக் கூட்டத்தை ரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details