டி.ஏ. ராஜபக்ச மற்றும் டந்தினா ராஜபக்ச தம்பதிக்கு 1949ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20ஆம் தேதி பிறந்தார் கோத்தபய ராஜபக்ச. அவர் இலங்கையின் கொழும்பு பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில் நுட்பத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்தார்.
அதன்பிறகு இலங்கை ராணுவத்தில் 1971ஆம் ஆண்டு இணைந்த கோத்தபய, லெப்டினன்ட் கர்னல் பதவி வரை உயர்ந்து 20 ஆண்டுகள் பணியாற்றினார். அயோமா ராஜபக்சவைத் திருமணம் செய்து கொண்ட கோத்தபயவுக்கு மனோஜ் என்ற மகன் இருக்கிறார்.
1992ஆம் ஆண்டு ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற கோத்தபய, அமெரிக்காவில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இதைத்தொடர்ந்து 1998ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கும் லயோலா லா ஸ்கூலில் கோத்தபய பணியாற்றினார்.
இந்தச் சூழலில் 2005ஆம் ஆண்டு இலங்கை அதிபராக தனது சகோதரர் மஹிந்த ராஜபக்ச பதவியேற்றப் பிறகு, அவரது அரசாங்கத்தில் பாதுகாப்புச் செயலராக பதவி வகித்தார். 2015ஆம் ஆண்டுவரை கோத்தபய அந்தப் பதவியில் இருந்தார்.
முக்கியமாக இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது இவரது செயல்பாடுகள் உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தின. போரில் தடை செய்யப்பட்ட குண்டுகள் வீசப்பட்டதாகவும், போர் விதிகளை கடுமையாக மீறியதாகவும் இவர் மீதும், மஹிந்த ராஜபக்ச மீதும், ராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா மீதும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.
அதுமட்டுமின்றி போரின் இறுதிக்கட்டத்தில் சமாதானம் பேச வந்த விடுதலைப் புலிகளையும் இவரது கட்டளையின்பேரில் இலங்கை ராணுவம் கொன்று குவித்ததாகவும் கூறப்பட்டது.
கோத்தபயவைக் கொல்வதற்கு கடந்த 2006ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி முயற்சி நடைபெற்றது. அதிலிருந்து நல்வாய்ப்பாக அவர் உயிர் தப்பினார். இலங்கையில் இருக்கும் தமிழர்கள் கோத்தபய மீது கடும் அதிருப்தியில் இருந்தாலும் சிங்களவர்களில் பெரும்பான்மையினர் அவரைக் கொண்டாடுகின்றனர். இலங்கை அரசின் ரண விக்ரம பதக்கம், ரண சூர பதக்கம் போன்ற விருதுகளை கோத்தபய ராஜபக்ச பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:
இலங்கையின் அதிபராக கோத்தபய ராஜபக்ச பதவியேற்றார்!