இலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு! - இலங்கை தொடர் குண்டு வெடிப்பு
2019-04-22 16:09:29
கொழும்பு: இலங்கை தலைநகர் கொழும்புவில் 9ஆவது முறையாக குண்டு வெடித்ததால், நாடு முழுவதும் பதற்றம் நிலவிவருகிறது.
இலங்கையில் ஏப்ரல் 21ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகையன்று எட்டு இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் 300 பேர் உயிரிழந்தனர். இதனால் நாட்டில் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டு பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டுவந்தது. அதில் 87 டெட்டனேட்டர்களை காவல் துறையினர் செயலிழக்கச் செய்தனர்.
இந்நிலையில், ஏப்ரல் 22ஆம் தேதி கொழும்பு கொச்சிக்கடை கந்தானையில் உள்ள புனித அந்தோணியார் ஆலயம் அருகே வேனில் இருந்த குண்டை செயலிழக்கச் செய்ய முயற்சித்தபோது அது வெடித்துள்ளது. பெரும் சத்தத்துடன் குண்டு வெடித்ததால், அப்பகுதியில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். ஆனால், இந்த குண்டுவெடிப்பின் காரணமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இன்று, 9ஆவது முறையாக குண்டுவெடித்ததால், நாடு முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது.
குண்டுவெடித்த பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.