இலங்கையின் மொத்தமுள்ள 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 196 பேர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மொத்த வாக்காளர்கள் ஒரு கோடியே 60 லட்சம் ஆகும்.
மீதமுள்ள 29 பேர் கட்சிகளின் வாக்கு விகிதத்துக்கு ஏற்ப நியமனம் செய்யப்படுவார்கள். நேற்று (ஆகஸ்ட் 5) நடந்த பொதுத்தேர்தல் வாக்குப்பதிவில் குறைந்த அளவிலேயே மக்கள் வாக்களித்துள்ளனர். குறிப்பாக மகிந்த ராஜபக்ச குடும்பத்தினர் நால்வர் முக்கிய பதவிக்கு போட்டியிடுகின்றனர். இதில், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
இவ்வேளையில் 2020 பொதுத் தேர்தலின் முதலாவது தேர்தல் முடிவை பிற்பகல் 2.30 மணியளவில் வௌியிட எதிர்பார்த்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். எனினும், தாமதமானால் பிற்பகல் 2.30க்கும் 3.00 மணிக்கும் இடையில் முதலாவது தேர்தல் முடிவை வௌியிடப்படும் என அவர் தெரிவித்தார்.
இலங்கையில் 1977ஆம் ஆண்டிற்கு பின்னர் மூன்றாவது முறையாக குறைந்த வாக்கு பதிவினை ஆகஸ்ட் 5ஆம் தேதி நடந்த பொது தேர்தல் சந்தித்துள்ளது. தேர்தலில் முழுமையாக 70 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.