இலங்கையில் ஞாயிற்றுக்கிழமை நடந்து முடிந்த இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சவின் இளைய சகோதரர் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றார். 70 வயதான கோத்தபய ராஜபக்ச தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட, சஜித் பிரேமதாசவை சுமார் 13 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதனால் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சவுக்கு சர்வதேச தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இலங்கை அதிபருக்கு வாழ்த்துத் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா வர அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில், கோத்தபய ராஜபக்சவை சந்தித்து வாழ்த்து தெரிவித்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், இலங்கையில் அமைந்துள்ள புதிய தலைமையின் கீழ் இந்தியா-இலங்கை உறவு மேம்படும் எனத் தான் நம்புவதாக ட்வீட் செய்திருந்தார்.