அமெரிக்காவின் ஃபைஸர் நிறுவனம், ஜெர்மனியின் பயோ என்டெக் (BioNTech) ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கரோனா தடுப்பூசிக்கு உலகிலேயே முதல் நாடாக பிரிட்டன் ஒப்புதல் வழங்கியுள்ளது. மாடர்னா நிறுவனம் தயாரித்த தடுப்பூசிக்கு அவசரப் பயன்பாட்டிற்கான அனுமதி அளிக்கக் கோரி அந்நிறுவனம் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் விண்ணப்பித்துள்ளது.
இதேபோல், உலகின் பல்வேறு நாடுகளில் கரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், கரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்கு ஏழை மற்றும் நடுத்தர வருமான நாடுகளுக்கு 5 மில்லியன் அமெரிக்க டாலர்களை நிதியுதவியாக சிங்கப்பூர் வழங்கவுள்ளது.
சிங்கப்பூர் சுகாதாரம் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகம் ஒருங்கிணைந்து இந்த முடிவை எடுத்துள்ளது. அடுத்தாண்டு இறுதிக்குள், கரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்து நாடுகளுக்கிடையே பகிர்ந்தளிக்க கோவாக்ஸ் செயல்முறை வகுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், 2 பில்லியன் கரோனா தடுப்பூசிகள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில், சிங்கப்பூர் உள்பட 97 நாடுகள் பங்கேற்று நிதியுதவி வழங்கவுள்ளன. இதுகுறித்து சிங்கப்பூர் அரசு வெளியிட்ட அறிக்கையில், "கரோனா தடுப்பூசிகளை பல்வேறு நாடுகளுக்கு எடுத்துச் செல்லும் வகையில் எங்கள் ஆதரவை தெரிவித்துள்ளோம். தடுப்பூசிகள் அனைத்து நாடுகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.