சீனாவின் வூஹான் மாநகரில் கடந்தாண்டு இறுதியில் கோவிட்-19 தொற்று கண்டறியப்பட்டது. அந்நாட்டு அரசின் தீவிர நடவடிக்கைகள் காரணமாக தற்போது தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இருப்பினும் மற்ற நாடுகளில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
தென் கிழக்கு ஆசியாவில் கோவிட்-19 தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடாக சிங்கப்பூர் இருக்கிறது. குட்டி நாடான சிங்கப்பூரில் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து அதிகரித்துவந்தது. இதனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்குமோ என்று அந்நாட்டு அரசு அச்சம்கொண்டது.
இந்நிலையில், சில வாரங்களுக்குப் பின் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சிங்கப்பூரில் சனிக்கிழமை முதன்முறையாகக் குறைந்துள்ளது.
இது குறித்து அந்நாட்டின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "சனிக்கிழமை 753 பேருக்கு மட்டும் புதிதாக கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதில் 739 பேர் வெளிநாட்டினர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.