பாகிஸ்தான் நாட்டில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் ‘பாகிஸ்தான் தாய்’ (Madar-e-watan) என்ற விருதைப் பெற்ற முதல் பாகிஸ்தான் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றவர் இந்தியாவின் மகளான ஷீலா ஐரீன் பந்த்.
உத்தரக்காண்ட் மாநிலத்திலுள்ள அல்மோராவில் பிறந்து, பாகிஸ்தான் நாட்டின் முதல் பிரதமரான லியாகத் அலி கானைக் கரம்பிடித்தவர் ஐரீன். தனது இறுதி மூச்சு பிரியும் வரை பெண்களின் உரிமைக்காகப் போராடி, அடிப்படைவாதச் சக்திகளுக்காக எதிராகக் கர்ஜித்தார்.
இந்தியாவிற்கு அல்மோரா அளித்த கொடை:
வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமான அல்மோரா, பல சிறந்த மனிதர்களை இந்திய நாட்டிற்கு வழங்கியுள்ளது என்றே கூறலாம். பாரத ரத்னா விருது பெற்ற கோவிந்த் வல்லப் பந்த்தாகட்டும் (உ.பி.யின் முதல் முதலமைச்சர், சுதந்திரப் போராட்ட வீரர்), நடன மேதை உதய் சங்கராகட்டும் இவர்கள் இருவருமே அல்மோராவிலிருந்து நாட்டுக்குத் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டவர்கள்தான்.
பாகிஸ்தானின் முதல் பிரதமரான லியாகத் அலி கானை (1947-1951) மணமுடித்து, பாகிஸ்தானின் முதல் பெண்மணியாகி இவர்களுடன் தன்னையும் இணைத்துக்கொண்டார் ஐரீன். பேகம் ரானா லியாகத் அலிகான் என்ற பெயரில் அழைக்கப்படும் இவரின் சேவையைப் பாராட்டி 'நிஷான்-இ-இம்தியாஸ்' என்ற பட்டத்தை வழங்கி பாகிஸ்தான் கௌரவித்தது.
ஐரீனின் ஆரம்பக்கால வாழ்க்கை:
1905ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் நாள் ஐரீன் டேனியர் பந்த் என்பவருக்கு மகளாகப் பிறந்தார். 1887ஆம் ஆண்டு வாக்கில் இவரின் தாத்தா கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதால், இவர்களின் குடும்பம் கிறிஸ்தவ குடும்பமாக மாறியது. ஆரம்பக் கல்வியை அல்மோராவிலும், நைனிதாலிலும் பயின்ற ஐரீன், மேல்நிலைக் கல்வியை லால் பாக் பள்ளியில் முடித்தார். இசபெல்லா தோபர்ன் கல்லூரியில் பொருளாதாரம் மற்றும் மதம் குறித்த ஆராய்ச்சிப் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
ஐரீன் முன்னோர்களின் வீடு இப்போதும் அல்மோராவிலுள்ள மெதடிஸ்ட் தேவாலயத்தின் கீழ் பாதுகாக்கப்படுகிறது. அங்கு அவரது சகோதரர் நார்மன் பந்த்தின் மகள் மீரா பந்த், ஐரீன் பேரன் ராகுல் பந்த் ஆகியோர் குடியிருக்கின்றனர்.
பழைய நினைவலைகளை அசைபோடும் ராகுல் பந்த், தனது பாட்டி திருமணத்திற்குப் பின் அல்மோராவுக்கு ஒருமுறை கூட வரவில்லை என்றும், தனது தாத்தா (ஐரீன் சகோதரர்) நார்மனுக்கு அடிக்கடி அவர் கடிதம் எழுதுவார் என்றும் கூறுகிறார்.
லியாகத் அலி கான் உடனான அந்த முதல் சந்திப்பு எப்படி நடந்தது?
ஐரீன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயத்தில், பிகாரில் பெரும் வெள்ளம் ஏற்பட்டிருந்தது. இவ்வெள்ளத்தால் பெருவாரியான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்திருந்தனர். அவர்களுக்கு உதவுவதற்காக தனியார் அறக்கட்டளை ஒன்று நிகழ்ச்சி ஒன்றை நடத்துவதாகவும், அதற்கு டிக்கெட் விற்பனை செய்ய வேண்டும் என்றும் பெற்றோர் ஐரீனிடம் கூறியுள்ளனர்.
டிக்கெட் விற்பதற்காக லக்னோ சட்டப்பேரவைக்குச் சென்றிருந்த ஐரீன், முதல்முறையாக தன்னுடைய வருங்கால கணவர் லியாகத் அலி கானைச் சந்தித்துள்ளார். தான் பாகிஸ்தான் முதல் பிரதமரின் மனைவியாவோம் என்று அப்போது அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
டிக்கெட் வாங்க மறுத்த லியாகத்திடம் எப்படி ஐரீன் டிக்கெட்டை விற்றார்?
இவர்களின் முதல் சந்திப்பில் சுவாரசியத்திற்குச் சற்றும் குறைவில்லை என்றே சொல்லலாம். ஆம், ஆரம்பத்தில் டிக்கெட் வாங்க தயாங்கியிருக்கிறார் லியாகத். ஆனால், ஐரீனுக்கோ அவரிடம் எப்படியாவது இரண்டு டிக்கெட்டுகளைத் தள்ளிவிட்டுவிட வேண்டும் என்று பேராசை.
நிகழ்ச்சிக்கு தனக்குத் துணையாக அழைத்துவர யாரும் இல்லை என்று லியாகத் கூற, சற்றும் தாமதிக்காமல் நான் உங்களுடன் வருகிறேன் என்று ஐரீன் கூறி டிக்கெட்டுகளை விற்றுள்ளார். இப்படியாக இவர்களின் முதல் சந்திப்பே படு சுவாரசியமாக நிகழ்ந்தது.