ரஷ்யாவில் 2018ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில், அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் அமோகமாக வெற்றி பெற்று, தொடர்ந்து மீண்டும் ஆட்சியமைத்தார்.
ரஷ்ய அரசியலைப்புச் சட்டத்தின்படி, இரண்டு முறை தொடர்ந்து அதிபராக பதவி வகித்தவர்கள் மீண்டும் தேர்தலைச் சந்திக்க முடியாது.
இந்த விதிமுறையைத் தளர்த்தி, புடின் மீண்டும் இரண்டு முறை தேர்தலைச் சந்திக்க வழிவகைசெய்யும் சட்டத்திருத்த மசோதா இன்று அந்நாட்டு நாடாளுமன்ற கீழ் சபையில், ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து வரும் ஏப்ரல் 22ஆம் தேதி, இந்த மசோதா மீது பொது வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
இந்தச் சட்டத்திருத்தத்தைக் கடுமையாக விமர்சித்த, அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர்கள், இதற்கு எதிராகப் போராட்டம் மேற்கொண்டுள்ள மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
ரஷ்யாவின் கேஜிபி உளவுப் பிரிவில் உளவாளியாக தன் வாழ்க்கையைத் தொடங்கிய விளாடிமிர் புடின் (67), கடந்த இருபது ஆண்டுகளாக ரஷ்ய அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். இந்தக் காலகட்டத்தில் அதிபர், பிரதமர் என ஒரு பொறுப்பை ஏற்று, தன் அதிகாரம் நழுவிச்செல்லாமல் புடின் பார்த்துக் கொண்டார்.
தற்போது கொண்டுவரப்பட்டுள்ள சட்டத்திருத்த மசோதாவின் மூலம், ரஷ்யாவின் நிரந்தர அதிபராக நிலைத்திருப்பதே புடினின் திட்டம் என அரசியல் விமர்சகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க : அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை அதிகரிப்பு!