இன்று உலகின் மிக முக்கியக் கலைகளில் ஒன்றாக புகைப்படக் கலை கருதப்படுகிறது. நமது கையடக்க செல்போனில் படம் பிடிக்கும் ஆவல் பலர் மத்தியில் இருந்தாலும், புகைப்படத்தின் மூலம் ஒரு கதையை, உணர்ச்சிக்குவியலை, மாற்றத்தை ஏற்படுத்துவதே ஒரு சிறந்த புகைப்படக் கலைஞரின் திறனாகும்.
உலகில் மிகச்சிறந்த கிடைத்தற்கு அரிய தருணங்களை புகைப்படமெடுக்க பல காலம் காத்திருந்து புகைப்படம் எடுக்கும் நபர்களும் உண்டு. கடினமான ஒரு சூழ்நிலையில் ஒரு நொடி காத்திருப்பு கூட இல்லாமல் புகைப்படமெடுத்து சிறந்த புகைப்படத்தை உலகுக்கு கொடுத்த நபர்களும் உண்டு. அப்படி நமது மனதை பாதித்த மாற்றத்தை கொண்டுவந்த புகைப்படங்கள் குறித்து பார்க்கலாம்.
புகைப்படக் கலைஞரின் உயிரையே விலை கேட்ட புகைப்படம்:
1993ஆம் ஆண்டு கெவின் கார்ட்டர் என்னும் புகைப்படக் கலைஞர் எடுத்தப் புகைப்படம் உலகையே உலுக்கியது. இந்தப் புகைப்படம் எடுத்து பல ஆண்டுகள் கழிந்தப் பின்னரும் இதனை வெகு சுலபமாகக் கடந்துவிடமுடியாது. அந்தக் காலத்தில் ஆப்பிரிக்காவில் உள்ள தெற்கு சூடான் நாடு, உள்நாட்டு கலவரத்தில் பசி, பஞ்சம், பட்டினி என பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குழந்தை ஒன்று உயிரிழக்கும் தருவாயில் இருக்கிறது. குழந்தை அருகே இருக்கும் பிணம் தின்னும் கழுகு ஒன்று அதனை தின்னக் காத்திருக்கிறது. இதனை பார்க்கும் கெவின் உடனே அதனை புகைப்படம் எடுக்கிறார். இந்தப் புகைப்படம் ஒட்டு மொத்த உலகையே உலுக்கியது.
இதன் பிறகு 1994ஆம் ஆண்டு புலிட்சர் விருதினை கெவின் பெறுகிறார். நான்கு மாதங்களுக்குப் பிறகு கெவின் தற்கொலை செய்துகொண்டார். அவர் மீதான விமர்சனங்களால் அவர் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த விபரீத முடிவை அவர் எடுத்திருந்தார்.
உயிரிழந்து கிடக்கும் சிரியா குழந்தை:
2011ஆம் ஆண்டு சிரியாவில் உள்நாட்டு போர் நடக்கிறது. அங்கிருந்து அகதிகளாக பலர் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல முயல்கின்றனர். அதுபோன்ற ஒரு சூழ்நிலையில் 2015ஆம் ஆண்டு அய்லன் குர்தி என்னும் மூன்று வயது சிறுவனுடன் அவனது குடும்பத்தினர் கிரீஸ் நாட்டுக்கு படகு மூலம் தப்பிச் செல்கின்றனர்.