கடந்த மாதம் காஷ்மீரின் புல்வாமா பகுதியில் சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 40-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி தரும் வகையில் இந்திய விமானப்படை ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முகாம்களை குண்டு வீசி தகர்த்தது.
இதற்கிடையே, இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் விமானத்தை இந்திய விமானப்படை சாதுர்யமாக வீழ்த்தியது. இந்தத் தாக்குதலில் பாகிஸ்தான் எல்லையில் விழுந்த இந்திய விங் கமாண்டர் அபிநந்தனை அந்நாட்டு ராணுவம் சிறைபிடித்தது.
இரு நாடுகளுக்கிடையே அமைதி திரும்ப வேண்டும் என்ற நோக்கத்தில் அபிநந்தனை விடுதலை செய்வதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இதனையடுத்து, மார்ச் 1ஆம் தேதி கம்பீரமாக வாகா எல்லை வந்த அபிநந்தனை நாட்டு மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். எனினும், இரு நாடுகளுக்கிடையிலான உறவு பதற்றமாகவே நீடித்தது.
இந்நிலையில், பாகிஸ்தான் தேசிய தினம் இன்று கொண்டாப்பட்டுவருகிறது. இதனை முன்னிட்டு அந்நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறியுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.