கொழும்பு: இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் ஆக.5ஆம் தேதி நடந்தது. இந்தத் தேர்தலில், மொத்தமுள்ள 225 தொகுதிகளில் மகிந்த ராஜபக்சவின் ஸ்ரீலங்கா மக்கள் கட்சி 145 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.
அந்த வகையில், 22 மாவட்டங்களில் நான்கை தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் வெற்றியை பதிவு செய்துள்ளது. மேலும், பெரும்பான்மை சிங்கள சமூகம் ஆதிக்கம் செலுத்தும் தெற்கு பகுதிகளில் ராஜபக்ச கட்சிக்கு வாக்குகள் 60 சதவீதம் வரை உயர்ந்து காணப்பட்டன.
மொத்தம் பதிவான வாக்குகளில் ராஜபக்ச கட்சி 60 லட்சத்து 80 ஆயிரம் வாக்குகளை பெற்றுள்ளது. இது 59.9 சதவீதமாகும். கடந்தாண்டு நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் சகோதர் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றார்.
இதையடுத்து மகிந்த ராஜபக்சவுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், நாடாளுமன்ற தேர்தலை நடத்த அவசரம் காட்டினார். ஆனால் கரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தத் தேர்தல் இருமுறை தள்ளிபோனது.
மேலும் இந்தத் தேர்தலில் சஜித் பிரேமதாசவின் கட்சி 20 லட்சத்து 70 ஆயிரம் வாக்குகள் பெற்று, 23 சதவீத வாக்குகளுடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. பிரதான தமிழ் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 10 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. இது கடந்த முறை 16 இடங்களில் வெற்றிபெற்றிருந்தது. அந்த வகையில் தற்போதைய தேர்தலில் ஆறு தொகுதிகளை இழந்துள்ளனர். இதேபோல் மற்ற கட்சிகளும் பெரும் சரிவை சந்தித்துள்ளன.
இலங்கை தேர்தலில் வெற்றி பெற்ற ராஜபக்சவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதற்கு நன்றி தெரிவித்து ராஜபக்ச பதிவிட்ட ட்வீட்டில், “ இலங்கை மக்களின் வலுவான ஆதரவுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த உங்களுடன் நெருக்கமாக பணியாற்ற நான் எதிர்நோக்குகிறேன்.இலங்கையும், இந்தியாவும் நெருங்கிய நண்பர்கள். உறவுகளும் கூட” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:வாரணாசி செல்வது புத்த மதத்தவருக்கு பிரதான ஒன்று' - இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ச