இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் புயல் காரணமாக வெள்ளம் ஏற்பட்டு தொடர் தாக்கத்தை ஏற்படுத்துவருகிறது. குறிப்பாக, அசாம் பார்பேடா மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கில் சிக்கிய இருவர் (ஜூலை 22ஆம் தேதி) நேற்று உயிரிழந்தனர். இதனால், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 89ஆக உயர்ந்துள்ளது. மொத்தமுள்ள 33 மாவட்டங்களில் 26 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
26.32 லட்சம் பேர் வெள்ளத்தில் சிக்கி தவித்துவருவதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. பிகாரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 19 குழுக்கள் மீட்பு பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தால் வீடுகளை இழந்த மக்கள் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே கூடாரங்களை அமைத்துள்ளனர்.