டாக்கா: வங்கதேசம் சென்றடைந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை அந்நாட்டு அதிபர் அப்துல் ஹமீது, அவரது மனைவி ரசிதா ஹமீது வரவேற்றனர். கரோனா ஊரடங்கிற்குப் பிறகு ராம்நாத் கோவிந்த் வங்கதேசம் செல்வது இதுவே முதல்முறையாகும்.
வங்கதேசம் சென்றடைந்த அவர் அந்நாட்டின் 50ஆவது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் விருந்தினராகப் பங்கேற்கிறார், இதற்காக டிசம்பர் 15 முதல் 17 வரை அங்கு தங்கி இருப்பார். இந்த விழாவிற்காக இந்தியா சார்பில் கௌரவ விருந்தினராக அழைக்கப்பட்டிருக்கிறார்.
வெளியுறவுத் துறைச் செயலர் ஹர்ஷ்வர்தன் ஷிரிங்லா கூறுகையில், இந்தச் சந்திப்பின் மூலம் இந்திய-வங்கதேச உறவு புதுப்பிக்கப்படும” என்றார். மேலும் இந்தியா தனது நிலப்பரப்பு மட்டும் அல்லாது வரலாறு, பாரம்பரியம் என அனைத்தையும் வங்கத்துடன் பகிர்ந்துகொண்டிருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டினார். மேலும் விடுதலைப் போராட்டத்திலும் டெல்லி உதவி புரிந்துள்ளதையும் நினைவுகூர்ந்தார்.
இத்தகைய சந்திப்புகள் இரு நாடுகளுக்கும் ஓர் இணக்கமான உறவை மேம்படுத்தும், இது அடிப்படையில் பல ஒப்பந்தங்களுக்கான நேர்மறை சமிக்ஞை எனவும் எடுத்துக்கொள்ளலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க:குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: வருண் சிங் காலமானார்!