இலங்கை அதிபர் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் திருநாள் போது தாக்குதலுக்குள்ளான புனித அந்தோணியார் தேவாலயத்துக்குப் பயணம் மேற்கொண்டது ஈடிவி பாரத். தேர்தலில் அங்கு வசிக்கும் கிறிஸ்துவ சிறுபான்மையினரின் வாக்கு முக்கிய பங்கு வகிக்கும் என்ற நிலையில், அங்குள்ள கள யதார்த்தத்தைப் பிரத்தியேகமாகப் படம் பிடித்துத் தருகிறது. ஈடிவி பாரத் தலைமை செய்தி ஆசிரியர், நிஷாந்த் சர்மா புனித அந்தோணியார் தேவாலயத்தின் திருத்தந்தை ஜுட் பெர்ணான்டோவிடம் பிரத்தியேகமாகப் பேட்டி கண்டார்.
அப்போது பேசிய தந்தை பெர்ணான்டோ, 'நாங்கள் நீதிக்காக இன்னும் காத்திருக்கிறோம். தேவாலயம் தனக்கான நீதியை எதிர்பார்த்துள்ளது. இதன் பின்னணியில் உள்ளது யார், இந்த கொடூரம் எவ்வாறு நிகழ்ந்தது என்ற உண்மை வெளிவர வேண்டும்' எனத் தெரிவித்தார்.
மேலும், 'ஆரம்பக்கட்டத்தில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவிடமிருந்து எந்தவொரு முன்னேற்றமும் வெளிவராத நிலையில், தேர்தலில் கிறிஸ்துவர்களின் வாக்கு குறித்து அவர் தெரிவித்ததாவது, வாக்காளர்களின் முடிவுகளில் ஒரு பொழுதும் தேவாலயம் தலையிட்டதில்லை. எந்தவொரு கட்சி சார்ந்தோ, வேட்பாளர் சார்ந்தோ எந்த முன்முடிவுகளும் எடுத்ததில்லை. இதற்கு முன்னரும் பல தேர்தல்கள் நடந்துள்ளன. அவற்றில் வாக்காளர்கள் சுதந்திர மனநிலையுடன் வாக்களிப்பார்கள்' எனத் தெரிவித்தார்.
தேவாலயத்தில் நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணையில் பெரும்பாலான கிறிஸ்துவ மக்களுக்கு அதிருப்தி நிலவிவருகிறது. இது குறித்து அரசின் மீது நம்பிக்கையின்மை நிலவுவதாகக் கருதப்படுகிறது.