தெற்காசியாவின் இந்தோ-பசிபிக் பகுதியில் அதிகரித்துவரும் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்க அரசு ராஜதந்திர நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறது.
அந்நடவடிக்கைகளில் ஒன்றாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெற்காசியாவில் இந்தோனேசியா, மாலத்தீவு போன்ற நாடுகளுக்குச் சென்று அந்நாட்டு அமைச்சர்கள், உயர் அலுவலர்களை நேரில் சந்தித்துவருகிறார்.
அந்த வகையில், அரசுமுறை பயணமாக இன்று கொழும்புவை பாம்பியோ வந்தடைந்தார்.
அங்கு இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் தினேஷ் குணவர்தனேவுடன் கலந்துரையாடிய அவர், சீனாவின் கடன், முதலீடுகள் தொடர்பாக மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியதாக அறியமுடிகிறது.
இந்தோ-பசிபிக் பகுதியில் அதிகரித்துவரும் சீனாவுக்கு ஆதரவளிப்பதை மறுபரிசீலனை செய்யக்கோரி அழுத்தம் தருவதாக அந்தப் பேச்சு இருந்ததாக கொழும்பு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
இலங்கையின் முழு இறையாண்மையைத் தக்கவைத்துக் கொள்ளும்வரை அமெரிக்க அரசு சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்கான ஒரு கலங்கரை விளக்கமாக, அந்நாட்டுக்கு நட்புறவாக விளங்கும் என இந்தச் சந்திப்பின்போது பாம்பியோ வாக்குறுதி அளித்தார்.
அதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய குணவர்த்தனே, அனைத்து நட்பு நாடுகளுடனும் ஒத்துழைக்க இலங்கை தயாராக உள்ளது எனக் கூறி நடுநிலை வகிப்பை உறுதி செய்துகொண்டார்.
கொழும்புக்கு பாம்பியோ வருவதற்கு முன்னதாக, இலங்கையில் உள்ள சீன தூதரகம் அவரது வருகையை கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.