கொழும்பு: இலங்கையின் 73ஆவது சுதந்திர தினம் நாளை (பிப். 4) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இலங்கை சுதந்திர தினம்: ராஜபக்சவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து! - இந்தியா-இலங்கை உறவுகள்
இலங்கை சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அதில், "இந்தியா- இலங்கை ஆகிய நாடுகள் மொழியியல், மதம் மற்றும் கலாசார மரபுகளின் அடிப்படையில் வேரூன்றிய உறவுகளைக் கொண்டுள்ளன. கரோனா தொற்றுநோய்க்கு எதிராக இந்தியாவுடன் இணைந்து இலங்கை பல்வேறு ஒத்துழைப்புகளை நல்கிவந்தது. வரும் ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவுகள் மேலும் உறுதிப்படுத்தப்படும். நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கு பங்களிக்க வேண்டும்.
வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகள், மக்கள் தொடர்புகளில் சிக்கல்கள் இருப்பினும் இரு நாடுகளுக்கிடையேயும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த வாரம், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச, அந்நாட்டிற்கு ஐந்து லட்சம் கரோனா தடுப்பூசிகளை வழங்கியதற்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.