பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான்-தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பி.டி.ஐ.) ஆட்சி நடைபெற்றுவருகிறது. கடந்த 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் முறைகேடுகள் செய்துதான் இம்ரான் கான் வெற்றி பெற்றதாக, அந்த நாட்டின் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. தொடர்ந்து, இம்ரான் கானின் அரசை ராணுவம் வழிநடத்துகிறது என்றும்; ஊழல் மலிந்துவிட்டது என்றும் விமர்சித்து அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போர்க்கொடி உயர்த்திவருகின்றன.
இந்நிலையில், இம்ரான் கான் அரசுக்கு எதிராகப் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி (பி.எம்.எல்-என்), ஜாமியத் உலமா-இ-இஸ்லாம் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளிட்ட 11 எதிர்க்கட்சிகள் சேர்ந்து பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் (Pakistan Democratic Movement) என்கிற கூட்டணியை, கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமைத்தன.
பாகிஸ்தான் ஜனநாயக இயக்கத்தின் சார்பில் இம்ரான் கான் ஆட்சிக்கு எதிராக, நாடு தழுவிய அளவில் பேரணிகள், பொதுக்கூட்டங்கள், மக்கள் விழிப்புணர்வுக் கூட்டங்களை எதிர்க்கட்சிகள் நடத்திவந்தன. கரோனா வைரஸ் பரவலைக் காரணமாக கூறி பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடத்த அரசு தடை விதித்த போதிலும், பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆளும் அரசுக்கு எதிராக அணிதிரண்டு வந்தனர்.