கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சீனாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கப்பலில் பயணித்த சிலரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்னும் நிலுவையில் உள்ளன.
பயணிகளிடம் தலைவலி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் உள்ளதா என்பது குறித்த தகவல்களை ஜப்பான் சுகாதாரத் துறை பயணிகளிடமிருந்து கேட்டுப்பெற்றுள்ளது. மருத்துவ பரிசோதனை முடிவில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பயணிகளுக்கு கப்பலிலிருந்து வெளியேற அனுமதி தரப்பட்டது.
கப்பலிலிருந்த மாற்றுத்திறனாளிகளுக்கு அங்கிருந்த ஜப்பான் வீரர்கள் உதவினர். பயணிகளில் சிலர் டாக்சிகள் மூலமும் சிலர் ரயில்கள் மூலமும் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
புதன்கிழமை (பிப்ரவரி 19) சுமார் 500 பயணிகள் கப்பலிலிருந்து வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கப்பலிலுள்ள இரண்டாயிரம் பேரும் வெளியேற பல நாள்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரவ மிக ஏதுவான இடமாக இந்தக் கப்பல் உள்ளதாக பல நிபுணர்கள் கருதுகின்றனர். சீனாவுக்கு வெளியே இந்த கப்பல்தான் வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட இடம். செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, கப்பலிலுள்ள 3,711 பேரில் 542 பேர் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.