பிசிபி (பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்) தலைவர் எஹ்சன் மணி, இஸ்லாமாபாத்தில் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானை சந்தித்து கிரிக்கெட் போட்டிகளின் விவரங்களையும், இங்கிலாந்திற்கு சென்று போட்டிகள் விளையாடுவது குறித்தும் விவரித்தார். இதனைக் கேட்டறிந்த இம்ரான் கான் இங்கிலாந்து சுற்றுப் பயணத்திற்கு அனுமதி வழங்கினார்.
இதில், "இந்த கரோனா தொற்றுப் பரவலையும் தாண்டி, மீண்டும் தொடங்கவுள்ள கிரிக்கெட், இன்ன பிற விளையாட்டுக்களை மக்கள் பார்க்க விரும்புவதால், டெஸ்ட், டி20 தொடர்களுக்காக பாகிஸ்தான் அணி இங்கிலாந்து செல்ல வேண்டும்" என பிரதமர் இம்ரான் கான், மணியிடம் கூறியதாக பிசிபி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், இங்கிலாந்திற்கு சுற்றுப் பயணம் செல்லவுள்ள அனைத்து வீரர்கள், அலுவலர்களின் பாதுகாப்பையும் ஆரோக்கியத்தையும் உறுதி செய்வதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தால் நெறிமுறைகள் அனைத்தும் முறையாக பின்பற்றப்படுகின்றனவா என்பதை உறுதிப்படுத்துமாறும், பிசிபி தலைவரிடம் இம்ரான் கான் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மூன்று டெஸ்ட், மூன்று டி20 தொடர்களை விளையாட பாகிஸ்தான் அணி இந்த மாத இறுதிக்குள் இங்கிலாந்து செல்ல உள்ளது. இதில் கலந்து கொள்ள செல்லும் 29 வீரர்களும், 14 அலுவலர்களும் இங்கிலாந்தை அடைந்த பிறகு 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவர். அதன் பின்னர் வீரர்கள் வலைப் பயிற்சிகளைத் தொடங்குவர்.
இதையும் படிங்க :பாக். வீரர்களின் குடும்பங்களுக்கு அனுமதியில்லை: பிசிபி