பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 642 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,155ஆக அந்த நாட்டில் உயர்ந்துள்ளது. இத்தகவலைப் பாகிஸ்தான் நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
மேலும், வைரஸ் தொற்று காரணமாக வியாழக்கிழமை மட்டும் 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இதனால் கோவிட்-19 தொற்றால் பாகிஸ்தானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 237ஆக அதிகரித்துள்ளதாகவும் அந்நாட்டு சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இதுவரை 2,527 பேர் சிகிச்சை நிறைவடைந்து பூரண குணமடைந்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 4,767 பேருக்கும், சிந்து மாகாணத்தில் 3,671 பேருக்கும், கைபர்-பக்துன்க்வா மாகாணத்தில் 1,541 பேருக்கும், பலூசிஸ்தான் மாகாணத்தில் 607 பேருக்கும், கில்கிட்-பால்டிஸ்தான் மாகாணத்தில் 300 பேருக்கும், இஸ்லாமாபாத் மாகாணத்தில் 214 பேருக்கும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 55 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 6,839 பேருக்கு உட்பட 13,365 மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.