பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் அரிஃப்வாலா கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது பயாஸ். இரவு நேரங்களில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வரும் முகமது, பகல் நேரங்களில் பாப்கார்ன் விற்று வருகிறார். ஆனால் இவருக்கு சிறுவயதில் விமானப்படையில் சேர வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது.
ஆனால் முகமது பள்ளிப் படிக்கும் காலத்திலேயே அவரது அப்பா இறந்துவிட்டதால், தனது பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டார். அப்போதைய சூழ்நிலை காரணமாக கனவு கைகூடவில்லை. பின்னர் கிடைக்கும் வேலைகளுக்கு சென்று குடும்பத்தினருக்கு உதவியாக இருந்துள்ளார்.
வருடங்கள் கழிந்தாலும் தனது கனவு கலையாமல் பார்த்துக்கொண்டார் முகமது. காலங்களும், வயதும் செல்லச் செல்ல, தனது விமானப்படை கனவான சொந்த விமானம் தயாரிக்க வேண்டும் என்பதாக மாறியது.
இதனையடுத்து வங்கிக்கடனாக ரூ.50 ஆயிரம் பெற்று, தனது சேமிப்புப் பணமான ரூ.50 ஆயிரத்தையும் சேர்த்து ஒரு லட்சத்தில் விமானத்தை தயாரிக்கத் தொடங்கினார். இவரது முயற்சியும் சிந்தனையும்தான் இவருக்கு உறுதுணையாக இருந்தது.
சாலையை கொத்தும் இயந்திரத்தின் எஞ்சின், ஆட்டோ டயர்கள் என கிடைத்த பொருட்களை எல்லாம் வைத்து தனது கனவுக்கு உயிரூட்டத் தொடங்கினார். தனக்குத் தெரியாத தொழில்நுட்பங்களை இணையதளத்தில் தேடத் தொடங்கி ஒவ்வொன்றாகக் கற்றுக்கொண்டு தனது கனவை நனவாக்கும் முயற்சியில் பகீரத முயற்சியில் இறங்கினார்.