கடந்த மே 21, 2008ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே தூதரக அணுகுமுறை ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஆண்டுதோறும் ஜனவரி 1, ஜூலை 1 ஆகிய இரு தேதிகளில் இரண்டு நாடுகளும் தங்கள் நாட்டுச் சிறைகளில் அடைத்துவைக்கப்பட்டுள்ள சிறைவாசிகள், மீனவர்களின் பட்டியலைப் பரிமாறிக்கொள்ள வேண்டும்.
இரு நாடுகள் இடையேயும் கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ச்சியான பதற்றம் நீடித்துவந்தாலும், சிறைவாசிகளின் பட்டியலை எந்தவித பிரச்சினையும் இல்லாமல் பகிரப்பட்டுவந்தன.
இந்நிலையில், ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கம் நடத்திய புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலளிக்கும்விதமாக, பிப்ரவரி 26, 2019ஆம் தேதி அன்று இந்தியாவின் போர் விமானங்கள் பாகிஸ்தானுக்குள் ஊடுருவி ஒரு பயங்கரவாத பயிற்சி முகாமைத் தாக்கியதில் இந்த உறவு முறிந்தது.
சிறைவாசிகளின் பட்டியலைப் பகிர்ந்துகொண்ட இருநாடுகள்! தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு உரிமையை இந்திய அரசு நீக்கம் செய்ததை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் மேலும் அதிகரித்தது. அத்துடன், பாகிஸ்தான் அரசு இந்தியாவுடனான தனது ராஜதந்திர உறவுகளை முழுமையாக முறித்துக்கொள்ளும் வகையில் இந்திய உயர் ஆணையரை அந்நாட்டில் இருந்து வெளியேற்றியது.
இந்நிலையில், இருநாடுகளும் இந்தாண்டு சிறைவாசிகளின் பட்டியல் பகிர்வை மேற்கொள்ளுமா என எதிர்பார்க்கப்பட்டுவந்த சூழலில் இரு அரசுகளும் தங்களது வெளிவிவகார அமைச்சகங்கள் வழியாக இன்று (ஜன.1) ஒரே நேரத்தில் அதனைப் பரிமாறிக்கொண்டன.
263 பொதுமக்கள், 77 மீனவர்கள் உள்ளிட்ட 340 பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் சிறைவாசிகளாக உள்ளனர். அதேபோல, பாகிஸ்தான் சிறைகளில் 49 பொதுமக்கள், 270 மீனவர்கள் உள்ளிட்ட 319 இந்திய சிறைவாசிகள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க :இம்ரான் அரசுக்கு எதிராக ஆலோசனைக் கூட்டம் நடத்திய எதிர்க்கட்சிகள்!