உலக நாடுகளை மிரட்டிய கொடிய நோய் வரிசையில் போலியோவும் (இளம்பிள்ளைவாதம்) அடங்கும். குறிப்பாக, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளையே அதிகம் தாக்கும் இந்த நோயானது, உணவு, நீர் மூலம் பரவும் தன்மை கொண்டது. இந்த நோயை உலக நாடுகள் ஒன்றிணைந்து விரட்டியுள்ளன. 1988இல் பரவிய போலியோ, தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
போலியோ நோயால் பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்கா, போலியோ இல்லாத நாடாக மாறிவிட்டது என உலக சுகாதார அமைப்பு அண்மையில் அறிவித்திருந்தது. அந்த வகையில், தற்போது போலியோ இல்லாத நாடாக பாகிஸ்தானும் மாறிவிடும் என உலக சுகாதார அமைப்பின், பாகிஸ்தான் பிரதிநிதி பலிதா மஹிபாலா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "தவறான எண்ணங்கள் மற்றும் கரோனா ஊரடங்கால், போலியோ நோய்க்கு எதிரான முயற்சிகள் சற்று பாதிக்கப்பட்டன. போலியோ எதிர்ப்பு திட்டம், தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. போலியா இல்லாத நாடாக ஆப்பிரிக்காவை அறிவித்தது போல், விரைவில் பாகிஸ்தானும் அறிவிக்கப்படும். இந்த நோயை விரட்டும் முயற்சிக்கு யுனிசெஃப் உள்ளிட்ட பல உலகளாவிய அமைப்புகள் உதவி செய்ய முன் வந்தன.
ஒவ்வொரு ஆண்டும், பல மில்லியன் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதன் மூலம் அவர்களின் உயிர் காப்பற்றப்படுகிறது. அடுத்த துணை தேசிய போலியோ ஒழிப்பு பரப்புரையில், 31 மில்லியனுக்கு அதிகமான குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து செலுத்த திட்டமிட்டுள்ளோம்" என்றார்.