சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குருநானக் தேவ், தனது கடைசி 18 ஆண்டுகளை பாகிஸ்தானிலுள்ள கர்தார்பூரில் கழித்ததாகக் கூறப்படுகிறது. இதனையொட்டி அவரது நினைவாக அங்கு குருத்வாரா அமைக்கப்பட்டது. அங்கு செல்வதை சீக்கியர்கள் புனிதப் பயணமாகக் கருதுகின்றனர்.
ஆனால், பாகிஸ்தானுக்கு விசா வாங்கிச் செல்வதில் பல சிரமங்கள் உள்ளன. இதனால் இருநாடுகள் சார்பாகவும் குருத்வாராவுக்கு வழித்தடம் அமைக்கத் திட்டமிடப்பட்டது. இந்தியா-பாகிஸ்தான் இடையே சாலையமைப்புப் பணிகள் முடிக்கப்பட்டு, சென்ற ஆண்டு நவம்பர் மாதம் கர்தார்பூர் வழித்தடம் திறக்கப்பட்டது.
இந்நிலையில், கரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் உள்ள பிரார்த்தனைக் கூடங்கள் மூடப்பட்டன. இந்தியாவிலும் அனைத்து வழிப்பாட்டுத் தலங்களும் மூடப்பட்டதால், கர்தார்பூர் வழித்தடமும் மூடப்பட்டது. தற்போது மகாராஜா ரஞ்சீத் சிங்கின் நினைவுநாளன்று (ஜூன் 29) கர்தார்பூர் வழித்தடத்தைத் திறக்க தயாராக உள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.