பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் சாச்ரோ நகர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் 'மாதா தேவால் பிஹிதானி' என்ற இந்து கோயில் அமைந்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இக்கோயிலுக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் அங்குள்ள சாமி சிலைகளை அடித்து உடைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் சம்பவத்துக்கு தொடர்புடையாதாக நான்கு பதின்ம வயது சிறுவர்களை கைது செய்துள்ளனர்.
விசாரணையில், சம்பவத்தன்று தாங்கள் கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட முயன்றதாக அச்சிறுவர்கள் ஒப்புக்கொண்டதாக காவல் துறையினர் கூறியுள்ளனர்.
இதனிடையே, இச்சம்பவத்தை கண்டித்து பேசிய சிந்து மாகாண சிறுபான்மை விவகார அமைச்சர் ஹரி ராம் கிஷோரி லால், கைது செய்யப்பட்ட சிறுவர்கள் மீது தெய்வ நிந்தனை வழக்குப்பதிவு செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், "அமைதி, மத நல்லிணக்கம், சலிப்புத்தன்மைக்கு பெயர்போன ஊர் 'சாச்ரோ'. இதனை உருக்குலைக்கும் நோக்கில் சில துஷ்ட கும்பல் செயல்பட்டுவருகிறது. இந்த வெறுப்பு செயல் அங்குள்ள இந்து சமூகத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது" என்றார்.
பாகிஸ்தான் அரசு தரவுகளின்படி அந்நாட்டில் சுமார் 75 லட்சம் இந்துக்கள் வாழ்ந்துவருகின்றனர். இதில் பெரும்பாலானோர் சிந்து மாகாணத்திலேயே வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : மணப்பெண்ணைக் கடத்தி கட்டாய மதமாற்றம்: பாகிஸ்தானில் அரங்கேறிய மற்றுமொரு கொடூரம்!