பாகிஸ்தான் சிறைகளிலுள்ள பெண் கைதிகளை விடுவிப்பது குறித்து அந்நாட்டு பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, “குறைந்த அளவிலான அபராதத் தொகை செலுத்த முடியாத காரணத்தினால் மட்டுமே ஏராளமான பெண்கள் சிறையில் உள்ளனர் என்பது பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதனைக் கருத்தில்கொண்டு மூன்று வருடங்களுக்கும் குறைவான சிறை தண்டனை பெறுபவர்களின் விடுதலைக்கான அனைத்து செலவுகளையும் அரசாங்கம் ஏற்கும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், மனித உரிமைகள் அமைச்சர் ஷிரீன் மசாரி, அட்டர்னி ஜெனரல், பாரிஸ்டர் அலி ஜாபர் ஆகியோருடன் கலந்தாலோசித்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், வெளிநாட்டுப் பெண் கைதிகள், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பெண் கைதிகள் குறித்த உடனடி அறிக்கைகளையும் தயார் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் கரோனா தொற்றுப் பரவலைக் கருத்தில் கொண்டு உடல்ரீதியாகவும் மனநோயாலும் பாதிக்கப்பட்ட கைதிகள், அபராதத் தொகை செலுத்த இயலாமல் சிறை தண்டனை அனுபவிக்கும் விசாரணைக் கைதிகள், பெண், சிறார் கைதிகளை விடுவிக்குமாறு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அந்நாட்டு அரசுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இந்த இடைக்கால உத்தரவின் அடிப்படையில் இம்ரான் கான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.