லாகூர் நகரிலிருந்து 91 பயணிகள், 8 ஊழியர்கள் என மொத்தம் 99 பேருடன் புறப்பட்ட பாகிஸ்தான் அரசின் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பிகே 8303 என்ற விமானம் கராச்சியில் குடியிருப்புப் பகுதிக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறிக்கையின்படி, இந்த விமானம் நண்பகல் 1.05 மணிக்கு லாகூர் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு நண்பகல் 2.30 மணிக்கு கராச்சி விமான நிலையத்தில் தரையிறங்கத் திட்டமிடப்பட்டது.
நண்பகல் 2.30 மணியளவில் கராச்சியிலிருந்து 15 கடல் மைல் தொலைவில் விமானம் இருந்தபோது 7,000 அடி உயரத்திற்குப் பதிலாக 10,000 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்துள்ளது. விமானம் பறக்கும் உயரத்தைக் குறைக்க விமானிக்கு கட்டுப்பாட்டு அறை அறிவுறுத்தியுள்ளது. விமானம் பறக்கும் உயரத்தை விமானி குறைக்காமல், 'தனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை, நான் சமாளித்துவிடுவேன்' எனப் பதிலளித்துள்ளார்.