ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு கடந்த 5ஆம் தேதி நீக்கியது. மேலும், அம்மாநிலம் ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் இந்த நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான், இந்தியாவுடனான தூதரக, வணிக உறவுகளைத் துண்டித்து உலக நாடுகளை ஆதரவைப் பெற தொடர்ந்து முயன்றுவருகிறது.
இதனால் இருநாடுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவிவருகிறது. இருநாடுகளும் அமைதியைக் கையாள வேண்டும் என உலக நாடுகள் அறிவுறுத்தியுள்ளன.
இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி, " காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டவிரோதமாக நீக்கி பிராந்திய அமைதிக்கும், ஸ்திரத்தன்மைக்கும் ஆபத்தை விளைவித்துள்ளது. காஷ்மீரில் இந்தியா மேற்கொண்டுவரும் மனித உரிமை மீறல்களை உலக கவனத்திலிருந்து திசைதிருப்ப என்ன வேண்டுமானாலும் செய்யும்.
பாகிஸ்தான் எந்த வகையான போருக்கும் தயாராக உள்ளது. காஷ்மீர் பிரச்னைக்கு தூதரக, அரசியல், சட்டப்பூர்வமான வழிகளில் தீர்வுகாண பாகிஸ்தான் முயன்றுவருகிறது. அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஐநா சபையின் வருடாந்திர கூட்டத்தில் இந்தப் பிரச்னையை எழுப்புவோம்" எனத் தெரிவித்தார்.