பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப், தற்போது லன்டனில் வசித்து வருகிறார். 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் உடல்நலக்குறைவை காரணம் காட்டி சிகிச்சைத் தேவைக்காக அவர் லண்டன் சென்றார்.
அவர் பிரதமர் பதவியிலிருந்தபோது பெரும் ஊழல், முறைகேடுகளில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டில், பாகிஸ்தான் நீதிமன்றம் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளித்து சிறை தண்டனை விதித்திருந்தது. இந்நிலையில், சிகிச்சையைக் காரணம் காட்டி எட்டு வாரங்கள் பிணை பெற்ற அவர், அரசிடம் அவசர ஒப்புதல் வாங்கி வெளிநாடு சென்றார்.
அவர் மீதான ஊழல் வழக்கின் மேல்முறையீட்டு விசாரணை தற்போது நடைபெற்று வரும் நிலையில், உடல் நிலை, கரோனா ஆகியவற்றைக் காரணம் காட்டி தன்னால் பாகிஸ்தான் வர முடியாது என நவாஸ் ஷெரிப் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நில முறைகேடு தொடர்பாக நவாஸ் மீது தொடுக்கப்பட்ட விசாரணையை பாகிஸ்தான் நீதிமன்றம் மேற்கொண்டது. விசாரணக்குப் பின் நவாஸ் ஷெரிஃபை கைது செய்ய பிணையில்லா வாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், லன்டனில் மருத்துவ சிகிச்சை எடுத்துவரும் நவாஸை கைது செய்ய பாகிஸ்தான் வெளியுறவுத்துறைக்கு அறிவுறுத்தியும் உள்ளது.
இதையும் படிங்க:பெண் கைதிகளை அரசு செலவில் விடுவிக்கும் பாகிஸ்தான்!