உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பால் இதுவரை 180க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 5 லட்சத்து 49 ஆயிரத்து 147பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 24 ஆயிரத்து 863 பேர் உயிரிழந்ததாக உலக சுகாதார நிறுவனம் உறுதிசெய்துள்ளது. சீனாவிலிருந்து பரவத்தொடங்கிய இந்தக் கொடிய வைரஸ், கடந்த 20 நாள்களாக இலங்கையில் 9 மாகாணங்களிலும் பரவி தீவிரமடைந்து கொண்டிருக்கிறது.
இலங்கையில், இந்த வைரஸ் பெருந்தொற்றால் 106 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 200க்கும் மேற்பட்ட வழக்குகள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து அந்நாட்டு மக்களை காக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும், அதன் தாக்கம் நாளுக்குநாள் தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
இலங்கையில் தீவிரமடைந்து வரும் கரோனா தொற்றுப் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முழு முடக்கம் அந்நாட்டு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கைக்கு சுற்றுலாச் சென்ற 16 ஆயிரத்து 900 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அங்கே தற்போது இருப்பதாக இலங்கை சுற்றுலா மற்றும் மேம்பாட்டு ஆணையம் அதிகாரப்பூர்வ தெரிவித்துள்ளது.