கரோனா தொற்று உலக அளவில் பரவி, நாளுக்கு நாள் உயிரிழப்பின் எண்ணிக்கையை அதிகரித்துவரும் நிலையில் வட கொரியாவில் ஒருவர்கூட கரோனாவால் பாதிக்கப்படவில்லை என அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் கூறியிருந்தார்.
இந்நிலையில், வட கொரியாவில் தற்போது ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நபர் தென் கொரியாவிலிருந்து சட்டவிரோதமாக எல்லையை கடந்து வட கொரியாவிற்கு வந்தவர் என கூறுகின்றனர். அவருக்கு கரோனா தொற்றின் அறிகுறிகள் காணப்பட்டதையடுத்து, அதிபர் கிம் ஜாங் உன் அலுவலர்களுடன் அவரச ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். தொற்றின் தீவிரத்தை உணர்ந்து, எல்லை நகரமான கேசாங்கில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று ஏற்படாமல் தடுக்க வட கொரியா அரசு கடுமையான கட்டுப்பாடுகளை தொடக்கத்தில் விதித்திருந்தது. கரோனா அறிகுறிகளுடன் காணப்படும் நபர் கடந்து வந்த எல்லையில் உள்ள ராணுவப் பிரிவுகளில் விசாரணை மேற்கொள்ளவும் அதிபர் கிம் ஜாங் உன் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சட்டவிரோதமாக எல்லையை கடந்து வந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.