கடந்த டிசம்பர் 20ஆம் தேதி, நாடாளுமன்றத்தை (பிரதிநிதிகள் அவை) கலைக்க வேண்டும் என நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி தலைமையிலான அமைச்சரவை கோரியதை அடுத்து குடியரசுத் தலைவர் வித்யா தேவி பண்டாரி நாடாளுமன்றத்தைக் கலைத்து உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 30, மே 10 ஆகிய இரு தேதிகளில் பிரதிநிதிகள் அவைக்கான தேர்தல் நடத்தப்படுமென பிரதமர் கட்க பிரசாத் ஷர்மா ஒலி அறிவித்தார்.
இதன்மூலம் வழக்கமாகத் தேர்தல் நடைபெற வேண்டிய நேரத்தைக் காட்டிலும் இரண்டு ஆண்டுகள் முன்னரே தேர்தலை நடத்த அவர் திட்டமிட்டிருந்தது அம்பலமானது.
ஒருங்கிணைந்த நேபாள கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும், பிரதமருமான கட்க பிரசாத் ஷர்மா ஒலி தனது கட்சிக்குள்ளேயே எதிர்ப்பைச் சந்தித்துவருகிறார் என்று கூறப்படுகிறது. கட்சியையும், ஆட்சியையும் ஒருதலைபட்சமாக நடத்தும் அவர் மீது பகிரங்க குற்றச்சாட்டுகளை முன்வைத்து 7 அமைச்சர்கள் பதவி விலகியது கவனிக்கத்தக்கது.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து நேபாள உச்ச நீதிமன்றத்தில் 13 வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கின்றன. அதில் ஒருங்கிணைந்த நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் துணைத் தலைவரும், மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான பிரசாண்டா புஷ்ப கமல் தஹாலும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.