கடந்த சில ஆண்டுகளாக கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நிலவிவந்த நிலையில், அமைதியை நிலைநாட்ட வேண்டும் என பல்வேறு நாட்டுத் தலைவர்களும் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
இதுதொடர்பாக அமெரிக்கா உடனான உச்சி மாநாடு இரண்டு முறை நடைபெற்றது. இதில் 2018ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற முதல் மாநாட்டில் அணு ஆயுத சோதனைகளை கைவிடுவதாக கிம் உறுதியளித்தார்.
இதனையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் வியட்நாமில் நடைபெற்ற இரண்டாவது உச்சி மாநாட்டில் எவ்வித உடன்படிக்கையும் எட்டப்படாததால் அம்மாநாடு தோல்வியில் முடிந்தது. இத்தகைய சூழலில், சமீபத்தில் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினை, கிம் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படும் பகுதி இத்தகைய சூழலில், வட கொரியா தனது கிழக்குக் கடல் பகுதியில் குறுகிய தூரம் வரை சென்று தாக்கும் சக்திகொண்ட ஏவுகணையை சோதனையை கடந்த 4 ஆம் தேதி நடத்தியதாகவும், உள்ளூர் நேரப்படி சரியாக 9.06 மணிக்கு இந்தச் சோதனை நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக தென் கொரியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் விசாரணை மேற்கொண்டு வந்தன. இந்நிலையில், இந்த சோதனை ஆத்திரத்தை மூட்டும் நடவடிக்கை இல்லை என்றும் இது வெறும் ஆயுத சோதனை போன்று தெரிகிறது என்றும் தென் கொரியா உளவுத்துறை தெரிவித்துள்ளது.