பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள பல் மருத்துவக் கல்லூரியில் சிந்த் பகுதியைச் சேர்ந்த இந்து மாணவி நம்ரிதா சந்தனி என்பவர் படித்தார். இந்நிலையில், நேற்று காலை கல்லூரி விடுதியிலுள்ள அவர் அறையில் சடலமாகக் கிடந்துள்ளார். நம்ரிதாவின் உடலை மீட்ட காவல் துறையினர், அவர் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்தார் என தகவல் கூறினர். ஆனால், மாணவியின் குடும்பத்தினர் நம்ரிதாவின் இறப்பில் மர்மம் உள்ளது எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் மாணவியின் சகோதரர் விஷால் சுந்தர் கூறுகையில், “என் தங்கை தற்கொலை செய்யுமளவிற்கு எந்தப் பிரச்னையும் அவளுக்கு இல்லை. அவள் மிகவும் புத்திசாலித்தனமான பெண். மேலும், அவளுக்கு ஏற்பட்டுள்ள காயங்களை பார்த்தால் யாரோ கொலை செய்தது போல இருக்கிறது.
தற்கொலை செய்துகொண்டால் கழுத்தில் மட்டுமே காயம் ஏற்பட்டிருக்க வேண்டும், ஆனால் அவள் கைகளிலும் கழுத்திலும் கேபிள் வயரை சுற்றி இறுக்கினால் ஏற்படும் காயங்கள் போல உள்ளது. எனவே, காவல் துறையினர் நேர்மையான முறையில் விசாரித்து என் தங்கையின் சாவிலுள்ள மர்மத்தை வெளி உலகுக்குக் கூற வேண்டும்” என சோகத்துடன் கூறினார்.