பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகளும், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் (நவாஸ்) துணை தலைவருமான மரியம் நவாஸ் கடந்த நான்கு மாதங்களாக பொதுநிகழ்ச்சிகள் மற்றும் ஊடகங்களில் தலைகாட்டுவதிலிருந்து விலகியிருந்தார்.
இந்நிலையில் நேற்று ஊடகங்களை சந்தித்த அவர் கூறுகையில், “தனிப்பட்ட காரணங்களுக்காக நான் அமைதியாக இருந்தேன். எந்தக் காரணமும் இன்றி என்னை சிறையில் அடைத்தாலும் நான் அஞ்ச மாட்டேன். நான் பலவீனமாகவில்லை, பலப்படுத்தப்பட்டு உள்ளேன் என்பதை அவர்கள் (இம்ரான் கான் அரசு) அறிய வேண்டும்” என்றார்.
கட்சிப் பதவி தொடர்பான கேள்விக்கு, “கட்சி தலைமை கேட்டுக்கொண்டால் தொடர்ந்து பதவி வகிப்பேன்” என்றார். நவாஸ் ஷெரீப்பின் லண்டன் மருத்துவப் பயணம் குறித்து கூறுகையில், “அவர் அங்கு சென்று குணமடைந்தார். இருப்பினும் பூரணமாக குணமடையவில்லை. அவர் அங்கு சிகிச்சைக்கு செல்லும்போது அவருடன் இருக்க விரும்புகிறேன். இது அரசியலாக்கப்படும் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை” என்றார்.