கோலாலம்பூர்:கரோனா வைரஸ் தொற்று நோயை சரியாக கையாளாதது, பொருளாதாரத்தை மீட்டெடுக்க சரியான நடவடிக்கை எடுக்காதது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை மலேசிய அரசு மீது எதிர்க்கட்சிகள் முன்வைத்தன. மேலும், பிரதமர் முகைதின் யாசின் தனது பெரும்பான்மையை மக்களவையில் நிரூபிக்கவேண்டும் எனவும் வலியுறுத்திவந்தன.
முகைதின் யாசினுக்கு ஆதரவளித்துவந்த கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 15 எம்பிக்கள் தங்களது ஆதரவை திரும்பப்பெற்றதன் மூலம், அவருக்கு பெரும்பான்மை இல்லாமல் போனது.
எதிர்க்கட்சிகள், ஆளும் அரசுக்கு பெரும்பான்மை இல்லை என தொடர்ந்து வலியுறுத்திவந்தாலும், அதனை ஏற்காத பிரதமர் முகைதின் தனக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதாகவே கூறிவந்தார். மேலும், அடுத்த மாதம் மக்களவையில் பெரும்பான்மையை நிரூபிக்கப் போவதாகவும் தெரிவித்துவந்தார்.
இந்நிலையில், திடீரென முகைதின் , தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை அவர், மன்னரிடம் இன்று காலை வழங்கினார். முன்னதாக, இவருக்கு வழங்கிய ஆதரவை திரும்பப் பெறுவதாக 15 எம்பிக்கள் மன்னருக்கு கடிதம் எழுதியிருந்தனர். இந்தக் கடிதத்தை மன்னர் ஏற்றுக்கொண்ட நிலையில், வேறு வழியே இல்லாமல் முகைதின் யாசின் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மன்னருடன் மோதினாரா முகைதின்?
மலேசியாவில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்தவண்ணமே இருக்கிறது. தற்போது, நாளொன்றுக்கு சுமார் 20ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது. இதுவரை சுமார் 12ஆயிரம் பேர் கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.
கரோனாவை கட்டுப்படுத்த கடந்த ஜனவரி மாதம் அவசர நிலைச் சட்டம் மலேசியாவில் மலேசிய மன்னரின் ஒப்புதலோடு நடைமுறைக்குவந்தது.
இந்நிலையில், கடந்த 1ஆம் தேதி அவசர நிலைச் சட்டம் முடிவுக்கு வந்ததாக பிரதமர் முகைதின் அறிவித்தார். தனது ஒப்புதல் இல்லாமல் அவசர நிலைச் சட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்ததாக மலேசிய மன்னர் கூறியிருந்தார்.
மன்னரின் கருத்தை மேற்கோள்காட்டி, மன்னருக்கு எதிராக செயல்படும் முகைதின் யாசின் பதவி விலகவேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தத்தொடங்கின.
கூட்டணியில் பூசல்
2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், முன்னாள் பிரதமர் மகாதீர், எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகிம், முகைதின் யாசின் ஆகியோர் கூட்டணி அமைத்து போட்டியிட்டனர். பின்னர் இக்கூட்டணி வெற்றி பெற்று மகாதீர் பிரதமர் பதவியில் அமர்ந்தார்.
தேர்தல் கூட்டணியின்போது ஏற்பட்ட ஆட்சிப்பகிர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், அன்வர் இப்ராகிமை பிரதமர் பதவியில் அமரவைக்கவேண்டும் என அன்வரின் ஆதரவாளர்கள் வலியுறுத்திவந்தனர்.
இதனிடையே, மகாதீர் தன்னுடைய பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து, 15 எம்பிக்களுடன் கூட்டணியிலிருந்து வெளியேறி முகைதின் யாசின், அம்னோ கட்சியுடன் கூட்டணி வைத்து பிரதமர் பதவியில் கடந்த மார்ச் மாதம் அமர்ந்தார்.
அப்போது இருந்தே, பெரும்பான்மை முகைதின் யாசினுக்கு இல்லை என எதிர்க்கட்சிகள் சாடிவந்தன.
கரோனா தொற்று அப்போது உச்சத்தில் இருந்த காரணத்தினால், இதனைப் ஊதி பெரிதாக்காமல் எதிர்க்கட்சிகள் அமைதிகாத்தன. இருப்பினும், அப்போது, நடைமுறைப்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்கள் தோல்வியைச் சந்தித்ததாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டிவந்தன.
குறிப்பாக, கரோனா தடுப்பூசி திட்டத்தை தாமதமாக தொடங்கியது, நிதியை சரியாக கையாளாதது பொருளாதாரத்தை மீட்டெடுக்க முறையான நடவடிக்கை எடுக்காதது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பிரதமர் முகைதின் மீது வைக்கப்பட்டன.
தொலைக் காட்சி வழியாக மக்களிடம் பேசிய முகைதின் யாசின் மக்களிடம் மன்னிப்பு கேட்ட முகைதின்
ராஜினாமா கடிதத்தை மன்னரிடம் அளித்துவிட்டு பின்னர் தொலைக்காட்சி வாயிலாக மக்களிடம் உரையாற்றிய முகைதின் யாசின், "நான் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். பெரும்பான்மை ஆதரவை நான் இழந்துவிட்டேன். நான் பிரதமராக இருந்த காலத்தில் என் தவறுகளுக்காக மன்னிப்பு கேட்க இந்த வாய்ப்பை பயன்படுத்துகிறேன்.
கரோனா நெருக்கடியான காலத்தில், நானும் எனது அமைச்சரவை சகாக்களும் முடிந்தளவிலான முயற்சிகளை எடுத்து உயிர்களை காப்பாற்றினோம். இருப்பினும், ஒரு சாதாரண மனிதராக நான் செய்த தவறுகளுக்காக மன்னிப்பு கேட்கிறேன்" என்றார்.
முகைதின் யாசின் பதவி விலகியிருந்தாலும், அடுத்த பிரதமர் நியமிக்கப்படும்வரை இவரே இடைக்கால பிரதமராக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முகைதீன் அமைச்சரவையில் இருந்த அமைச்சர்களும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துள்ளனர். இதனால் அந்நாட்டு அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'ஆப்கான் ஆட்சி கவிழ்ப்பு: ஜோ பைடன் பதவி விலக வேண்டும்'