நியூயார்க் : ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் தங்களின் பிடிக்குள் கொண்டுவந்துள்ளனர். இந்நிலையில், “ஆப்கானிஸ்தானில் பெண்கள் நிலை குறித்து ஆழமாக கவலையுறுகிறேன்” என மலாலா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில், “ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சியை கைப்பற்றி இருப்பது முழுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அங்குள்ள பெண்கள், சிறுபான்மையினர் மற்றும் மக்கள் உரிமை குறித்து ஆழமாக கவலையுறுகிறேன். அங்கு உடனடியாக போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு உலகளாவிய, பிராந்திய மற்றும் உள்ளூர் சக்திகள் குரல் கொடுக்க வேண்டும். அவசர மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட வேண்டும், அங்குள்ள அகதிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.