வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரியும், அந்நாட்டின் தொழிலாளர் கட்சியின் மத்தியக் குழு துணை துறை இயக்குநருமான கிம் யோங் ஜுங் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அதிபர் கிம் ஜாங் உன்னும் வடகொரிய அரசும் எனக்கு வழங்கியுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, தென் கொரியா மீது அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ராணுவ தளபதிக்கு உத்தரவிட்டுள்ளேன்.
நாட்டு மக்களின் கோபத்தைத் தணிக்க இந்நடவடிக்கைகளை கண்டிப்பாக ராணுவம் நிறைவேற்றும். கெய்சோங்கில் உள்ள தொடர்பு அலுவலகம் (Liaison Office) முற்றிலும் அழிக்கப்படுவதை தென் கொரியா விரைவில் காணப்போகிறது" என எச்சரித்துள்ளார்.
கிம் யோங் ஜுங் விடுத்துள்ள இந்த பகிரங்க எச்சரிக்கை, வடகொரிய அரசியல் வட்டத்தில் அவருக்கு உள்ள அதிகாரத்தை உணர்த்துவதாக அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு மிகவும் நெருக்கமான இவர், ஏற்கனவே அந்நாட்டின் மிகவும் சக்திவாய்ந்த நபர்களில் ஒருவராக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில், தென் கொரியா உடனான உறவை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு கிம் யோங் ஜுங்குக்கு வழங்கப்பட்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் - தென் கொரியப் பிரதமர் மூன் ஜே இன் இடையே கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க உச்சிமாநாட்டைத் தொடர்ந்து, கெய்சோங்கில் இரு நாடுகளுக்குமான தொடர்பு அலுவலகம் அமைக்கப்பட்டது.