அணு ஆயுதம், ஏவுகனைச் சோதனைகளை மேற்கொண்டு சர்ச்சை நாயகனாக வலம் வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், சில வாரங்களாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் தவிர்த்துவந்தார்.
இதனிடையே, அவர் உடல்நிலை மோசமாக உள்ளது, கோமாவில் உள்ளார், இறந்துவிட்டார் என கடந்த ஒரு வாரமாக வதந்திகள் வலம் வந்தன. இந்நிலையில், வட கொரிய தலைநகர் பியாங்யாங்கில் அமைந்துள்ள உரத் தொழிற்சாலையின் ரிப்பன் வெட்டும் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. நாட்டின் மூத்த அலுவலர்கள், கிம்மின் தங்கை யோ ஜாங் உள்ளிட்ட பலர் அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இதன் மூலம் அனைத்து விதமான வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. கிம் கருப்பு உடை அணிந்து சிரித்துக்கொண்டே ரிப்பன் வெட்டும் புகைப்படம் நாளிதழ்களில் வெளியாகியுள்ளன. கிம்முக்கு பின் அவர் தங்கை இருக்கும் புகைப்படமும் தொழிற்சாலை முன்பு ஆயிரக்கணக்கான மக்கள் கூடி இருக்கும் புகைப்படங்களும் நாளிதழ்களில் வெளியாகியுள்ளன.