ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான்கள் தாக்குதல் நடத்தி, கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட்.15) காபூலைச் சுற்றி வளைத்துவிட்டனர். இதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அதிபராக இருந்த அஷ்ரப் கானி நாட்டை, அவர்கள் வசம் ஒப்படைத்துவிட்டு வெளிநாடு தப்பினார்.
இதைத்தொடர்ந்து தாலிபான்கள் மக்களைத் தாக்க நேரிடும் என்ற அச்சத்தில் அங்கிருக்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக வெளிநாடுகளுக்குச் செல்லும் விமானங்களில் ஏறி பறக்க முற்பட்டனர்.
நாட்டைவிட்டு வெளியேறும் ஆப்கானிஸ்தானியர்கள் அப்போது போதிய இடவசதி இல்லாததால், விமான சக்கரத்தின் மேற்பகுதியில் அமர்ந்துசெல்லக்கூட முயன்றனர். இந்த விபரீத முயற்சியில் மூன்று பேர் நடுவானில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
தூதரகங்களை காலி செய்யும் நாடுகள்
தாலிபான்கள் காபூலுக்குள் நுழைந்த பிற்பாடு, பல்வேறு நாடுகளும் தங்களது தூதரகங்களை காபூலில் இருந்து காலி செய்து வருகின்றன. அங்கிருக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசும் பல்வேறு விமானங்களை காபூலுக்கு அனுப்பி, உடனடியாக அங்கிருக்கும் இந்தியர்களை மீட்கும் பணிகளில் இறங்கியுள்ளது.
இந்த நிலையில், ''ஆப்கனில் தூதரகங்கள், அயல்நாட்டு தொண்டு நிறுவனங்கள் வழக்கமாக செயல்படலாம். தூதர்கள், அலுவலர்கள் அச்சமின்றி தங்களது பணிகளை செய்யலாம். அனைவருக்கும் பாதுகாப்பான சூழல் வழங்கப்படும். அதேபோல, அரசு ஊழியர்களும் எவ்வித அச்சமும் இன்றி வழக்கம்போல் அலுவலகம் வரலாம். முழு நம்பிக்கையுடன் பணிகளைத் தொடரலாம்" என தாலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
பதாகைகளை ஏந்திப் போராடும் இஸ்லாமியப் பெண்கள்
தாலிபான்களை எதிர்த்து வீதிக்கு வந்த இஸ்லாமியப் பெண்கள் இருப்பினும் தாலிபான்களின் கடந்த கால வரலாற்றைக்கண்டு அச்சமடைந்த காபூல் நகர இஸ்லாமியப் பெண்கள் வீதிக்கு வந்து, தாலிபான்களுக்கு எதிராக பதாகைகளை ஏந்தி போராடி வருகின்றனர். முக்கிய வீதிகளில் தாலிபான்கள் தங்களது உரிமைகளைப் பறித்துவிடக்கூடாது எனக்கூறி, முழக்கமிட்டனர்.
துப்பாக்கி ஏந்திய முனையில் வீதிகளில் அவர்களைத் தடுக்கும் தாலிபான்களை, ஒன்றாகச் சேர்ந்து எதிர்த்து, படிப்பு, அரசியல், வேலை என எந்த உரிமைகளையும் தங்களிடம் இருந்து பறிக்கக்கூடாது காபூல் நகர இஸ்லாமியப் பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பெண் அடிமைத்தன அடையாளத்தை உடைக்க முயல்கிறதா தாலிபன்?