ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் புகழ்பெற்ற வாசிர் அக்பர் கான் மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதியில் இன்று (ஜூன்2) மாலை தொழுகைக்காக இஸ்லாமியர்கள் பலர் கூடியிருந்தனர்.
அப்போது சரியாக 7.25 மணியளவில் திடீரென பயங்கர சப்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது. இதில் ஒருவர் உடல் சிதறி உயிரிழந்தார். மேலும் மூன்று பேர் காயமுற்றனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இந்தத் தாக்குதலுக்கு தலிபான்கள் உள்ளிட்ட எந்தவொரு பயங்கரவாத இயக்கமும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. மேலும் தலிபான்கள் மசூதிக்கு உள்ளே தாக்குதல் நடத்தியதும் கிடையாது.
ஆகவே இந்த குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பின்னால் ஐ.எஸ். பயங்கரவாதிகள் இருக்கலாம் என காவலர்கள் சந்தேகிக்கின்றனர். கடந்த சனிக்கிழமை (மே30) காபூலில் உள்ளூர் தொலைக்காட்சி நிறுவனத்தின் பேருந்து மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் இரண்டு ஊழியர்கள் கொல்லப்பட்டனர்.
இதேபோல் கடந்த மாதம் பர்வான் மாகாணத்தில் உள்ள மசூதிக்குள் புகுந்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமுற்றனர் என்பது நினைவுக் கூரத்தக்கது.
இதையும் படிங்க: ஈஸ்டர் குண்டுவெடிப்பு நினைவு நாள் : மக்கள் வீடுகளில் அஞ்சலி