காபூல்:அமெரிக்க ராணுவப்படைகள் ஆப்கனை விட்டு வெளியேறத் தொடங்கியதிலிருந்துதாலிபன்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கிவிட்டனர். பத்து நாள்களாக நடைபெற்ற தாக்குதலின் விளைவாக, நாட்டின் முக்கியப் பகுதிகள் அனைத்தும் தாலிபன்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.
தலைநகர் காபூல், ஆகஸ்ட் 15ஆம் தேதி அவர்களால் கைப்பற்றப்பட்டது. 20 ஆண்டுகாலமாக அதிபராக இருந்த அஷ்ரப் கானி பதவி விலகி ஹெலிகாப்டர் முழுக்க பணத்துடன் நாட்டை விட்டு வெளியேறினார்.
இதனால், தாலிபன் ஆட்சிக்கு மறுப்பு தெரிவித்து ஆப்கன் மக்களும், மற்ற நாட்டு மக்களும் வெளியேற முயற்சிக்கிகின்றனர். இதனிடையே, ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலிருந்து, இந்தியர்கள் 129 பேருடன் ஏர் இந்தியா விமானம் டெல்லி சென்றது.
ஆப்கன் விமான சேவை ரத்து
கடந்த ஒரு வாரமாக மற்ற நாடுகளுக்கு செல்ல பொதுமக்கள், தலைநகர் காபூல் விமான நிலையத்தில் குவிந்துவந்தனர். ஆப்கனில் நிலவும் பதற்றம் காரணமாக பல்வேறு நாடுகள் காபூல் விமான நிலையத்திற்கான போக்குவரத்தை ரத்து செய்தன. அதன்படி ராணுவ விமானங்கள் தவிர மற்ற விமானங்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டது.
ஏற்கனவே, காபூல் நோக்கிய கிளம்பிய விமானங்களும் வளைகுடா நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டன. இதேபோல, ஏர் இந்தியா நிறுவனமும் டெல்லி-காபூல் விமான போக்குவரத்தை ரத்து செய்து, சிகாகோ-டெல்லி கனெக்ட்டிங் விமானத்தை கூட வளைகுடா நாட்டிற்கு திருப்பி விட்டது. இதன் காரணமாக, ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற முடியாமல் பல்வேறு நாட்டு மக்கள் தவித்துவந்தனர்.
ஆப்கனில் மீதமுள்ள அமெரிக்க ராணுவப் படையினர் காபூல் விமான நிலையத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இதனிடையே, நேற்று (ஆகஸ்ட். 16) விமான நிலையத்தில் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அதனால் ஐந்து பேர் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
விமானத்திலிருந்து விழும் நபர் மக்கள் விமான ஓடுபாதைகளில் ஓடி, விமானங்களில் ஏற முயற்சிக்கும் காணொலிகளும் வெளிவந்தன. குறிப்பாக மூவர், விமானத்தில் தொடங்கியபடி விமானத்தில் ஏறி கீழே விழும் காணொலி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், காபூல் விமான நிலையத்தை மீண்டும் திறக்கக்கோரி, பல்வேறு நாட்டினர் கோரிக்கை வைத்துவந்தனர்.
காபூல் விமான நிலையம் மீண்டும் திறப்பு
மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளுக்காக, இன்று(ஆகஸ்ட். 17) காபூல் விமான நிலையம் மீண்டும் திறப்பட்டுள்ளது. இதுகுறித்து,பென்டகனின் கூட்டுத் தலைமை அலுவலர் ஹாங்க் டெய்லர், "மக்களை வெளியேற்றும் முயற்சியில் அமெரிக்கா ராணுவம் ஈடுபட்டுள்ளது. இதற்காக, ராணுவ விமானங்கள் அமெரிக்க கடற்படையினர் உதவியுடன் தரையிறக்கப்படும்.
முதலாவதாக, 2,500 அமெரிக்க படையினரும், தூதர்களும், அமெரிக்கர்களும் வெளியேற்றப்படுவர். அதைத்தொடர்ந்து, ஆப்கன் மக்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கும்" எனத் தெரிவித்தார்.
ஆப்கன் நாட்டிலிருந்து அமெரிக்கப் படைகளை ஜோ பைடன் வெளியேற்றியதன் காரணமாக தாலிபன்கள் ஆட்சியை பிடித்துவிட்டனர். இதற்கு முழு பொறுப்பு அமெரிக்காதான் என்று ஆப்கன் மக்கள் தெரிவித்துவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:'ஆப்கன் ஆட்சி கவிழ்ப்பு: ஜோ பைடன் பதவி விலக வேண்டும்'