ஹாங்காங்கின் யுவான் லாங் நகரில் உள்ள ரயில் நிலையத்துக்குள் நுழைந்த வெள்ளை உடை, முகமூடி அணிந்த கும்பல் ஒன்று அங்கிருந்த பயணிகளைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
இரும்பு கம்பிகள், மரக் கட்டைகளைக் கொண்டு வன்முறையில் ஈடுபட்ட அந்த கும்பலிடமிருந்து தப்பிக்க பயணிகள் ரயிலுக்குள் தஞ்சமடைந்தனர்.
எனினும், ரயில்களுக்குள் நுழைந்து இந்த கும்பல் பயணிகளைக் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளது. பயணிகள் தாங்கள் வைத்திருந்த கொடைகளைக் கொண்டு தற்காத்துக் கொண்டனர். சம்பவத்தை படம்பிடித்த செய்தியாளர்கள் மீதும் தாக்குல் நடத்தப்பட்டது.
ஹாங்காங் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தொடுக்கப்பட்ட வன்முறையாக இது பார்க்கப்படுகிறது.
காவல் துறையினரின் தூண்டுதலின் பேரில்தான் அந்த கும்பல் வன்முறையில் ஈடுபட்டதாக எழுந்த புகாரை ஹாங்காங் நிர்வாகத் தலைவர் கேரி லேம் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இந்த சம்பவத்தில், 45 நபர்கள் காயமடைந்தனர். இதில், 22 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ரயில்நிலையித்தில் நடந்த வன்முறை முன்னதாக, ஹாங்காங் அரசின் கைதிகள் பரிமாற்ற மசோதாவுக்கு எதிராக அங்கு நடைபெற்ற போராட்டத்தில் காவல் துறையினர் பயன்படுத்திய கண்ணீர்ப்புகை குண்டுகளால் 14 பேர் காயமடைந்தனர்.
ஹாங்காங்கில் குற்றாவளியென சந்தேகிக்கப்படும் நபர்களை சீனாவுக்கு நாடுகடத்தும், கைதிகள் பரிமாற்ற மசோதாவை அப்பிராந்திய அரசு கொண்டுவந்ததற்கு எதிராக கடந்த மாதம் முதல் தொடர்ந்து போராட்டம் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.