தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஜப்பானின் புதிய பிரதமராக ஃபுமியோ கிஷிடா பதவியேற்பு - ஃபுமியோ கிஷிடா

ஜப்பானின் பிரதமராக இருந்த யோஷிடே சுகா மீது பரவலாக அதிருப்தி உருவானதைத் தொடர்ந்து வெளியுறவுத் துறை முன்னாள் அமைச்சரான ஃபுமியோ கிஷிடா பதவியேற்றுக்கொண்டார்.

Kishida as new PM of Japan
Kishida as new PM of Japan

By

Published : Oct 4, 2021, 1:19 PM IST

டோக்கியோ:ஜப்பானின் புதிய பிரதமராக ஃபுமியோ கிஷிடா பதவியேற்றுக்கொண்டார்.

கரோனா பெருந்தொற்றை மோசமாகக் கையாண்டதால் சுகா மீது அதிருப்தி எழுந்தது. இந்நிலையில், அவரது அமைச்சரவையின் செல்வாக்கு மதிப்பீடு 30 விழுக்காட்டிற்கும் கீழ் குறைந்தது. இதைத்தொடர்ந்து அவர் பதவி விலகினார்.

இதனையடுத்து, ஜப்பானில் ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி புதிய பிரதமரைத் தேர்வுசெய்யும் தேர்தலை நடத்தியது. இத்தேர்தலில் தாரோ கோனோ, ஃபுமியோ கிஷிடா, சனாயி தகாச்சி, செய்க்கோ நோடோ ஆகியோர் போட்டியிட்டனர்.

இதில் ஃபுமியோ கிஷிடாவுக்கும், தாரோ கோனாவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. தாரோ கோனா தடுப்பூசித் திட்டத்தைச் செயல்படுத்தியதில் பிரபலமடைந்திருந்தார். தன்பாலின உறவை ஆதரிப்பதாகப் பேசி ஜப்பான் இளைஞர்கள் மத்தியில் ஆதரவைப் பெற்றவர்.

ஆனால், இறுதியில் கூடுதல் ஆதரவைப் பெற்று ஃபுமியோ கிஷிடோ ஜப்பானின் அடுத்த பிரதமராகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். கிஷிடா 2012 முதல் 2017 வரை ஜப்பானின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்திருக்கிறார். அவர் ரஷ்யா, தென் கொரியா நாடுகளுடன் பல்வேறு சிக்கல்களைத் தீர்க்கப் பாலமாக இருந்திருக்கிறார்.

அணு ஆயுத ஒழிப்பே தனது வாழ்நாள் லட்சியம் என்று கூறுபவர். ஆனால், தன்பாலின உறவை ஆதரிப்பது, தன்பாலின திருமணங்களை அங்கீகரிப்பது போன்றவற்றில் கிஷிடா வெளிப்படையாக இதுவரை எதுவும் தெரிவித்ததில்லை.

1993ஆம் ஆண்டுதான் கிஷிடா அரசியலில் காலடி எடுத்துவைத்தார். அதற்கு முன்னர் அவர் வங்கியில் பணிபுரிந்துவந்தார். பேஸ்பால் விளையாட்டு மீது மிகுந்த ஆர்வம்கொண்டவர்.

இதையும் படிங்க:Pandora Papers: இந்திய பிரபலங்களின் முகத்திரையைக் கிழித்த பண்டோரா ஆவணங்கள்

ABOUT THE AUTHOR

...view details