உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் பெருந்தொற்றுப் பாதிப்பால் இதுவரை 210-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 39 லட்சத்து 18 ஆயிரத்து 744 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்து 70 ஆயிரத்து 769 பேர் உயிரிழந்துள்ளதாக, உலக சுகாதார நிறுவனம் உறுதிசெய்துள்ளது.
சீனாவிலிருந்து பரவத்தொடங்கிய இந்தக் கொடிய வைரஸ், கடந்த ஒருமாத காலமாக ஜப்பானில் மிகத் தீவிரமாகப் பரவிக்கொண்டிருக்கிறது. ஜப்பானில், இந்த வைரஸ் பெருந்தொற்றால் 15 ஆயிரத்து 477 பேர் பாதிக்கப்பட்டும், 577 பேர் உயிரிழந்தும் உள்ளதாக, அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கோப்புக்காட்சி : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து, அந்நாட்டு மக்களைக் காக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும், அதன் தாக்கம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. ஜப்பான் அரசு பன்னாட்டு உதவிகளைக் கோரி வருகிறது.
தொடர்ந்து ஆசிய வங்கி, பன்னாட்டு நிதி மையம் உள்ளிட்டவற்றின் உதவிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்நிலையில், ஜப்பான் அரசு முன்னெடுத்து வரும் கோவிட்-19 தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் ஜப்பான் ஷின்சோ அபே, தொலைபேசியில் கலந்துரையாடியதாக ஜப்பான் பிரதமர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த உரையாடலில் கோவிட் -19 தடுப்பூசிகள், மருந்துகளை உருவாக்குவதில், இருநாடு அரசுகளும் இணைந்து உழைக்க ஒப்புக் கொண்டுள்ளதாக அறிய முடிகிறது. மேலும், கரோனா வைரஸுக்கு எதிரான போருக்குப் பின்னர், இருநாட்டு பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான முயற்சிகளிலும் நெருங்கி பயணிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஜப்பான் சுகாதார அமைச்சகம், கோவிட்-19 நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கும் கிலியட் சயின்சஸ் இன்க் நிறுவனத்தின் ஆன்டிவைரல் மருந்துக்கு நேற்று ஒப்புதல் அளித்தது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க :சீனாவிலும் புதிய பாதிப்புகள், கரோனா வைரஸ் இன்றைய நிலவரம்!