ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம் மாஸ்கோவில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள இந்திய வெளிறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ரஷ்யா சென்றுள்ளார்.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றநிலை அதிகரித்துள்ள நிலையில், சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீயை இன்று (செப்.10) அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து ஆலோசனை மேற்கொள்வார் என்று எதிர்பார்கப்படுகிறது.
எல்லைப்பகுதியில் இரு நாட்டு பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடந்த மே மாதம் முதலே பதற்றம் நிலவிவருகிறது. இந்திய எல்லைப் பகுதிகளை ஆக்கிரமிக்க சீன ராணுவம் முயல்வதாக இந்தியா குற்றம் சாட்டியது.
குறிப்பாக, ஜூன் 15ஆம் தேதி கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த மோதலில் சீன ராணுவத்தின் வீரர்களும் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது.
எல்லையில் ஏற்பட்டுள்ள இந்தப் பதற்ற நிலையை தணிக்க இருநாட்டின் ராணுவ உயர் அலுவலர்களும் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், எல்லையில் உள்ள நிலைமையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.