ஹைதராபாத்:ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சியைப் பிடித்துள்ளனர். கடந்த காலங்களில் தாலிபன்களின் ஆட்சியில் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியானது. அதுபோன்ற அச்சம் தற்போது நிலவிவரும் நிலையில், பெண் அடிமைத்தன அடையாளத்தை மாற்ற தாலிபன்கள் முயற்சித்துவருகின்றனர்.
தலைநகர் காபூல் தாலிபன்களின் வசம் வந்தபின்பு, ஆப்கானிஸ்தானில் உள்ள டிஓஎல்ஓ என்ற தொலைக்காட்சியில் பெண் ஊடகவியலாளர், தாலிபன்களின் கலாசாரத் தலைவரை நேர்காணல் நடத்தினார்.
தாலிபன்களின் கலாசார பிரிவு
இது தொடர்பாக அத்தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர், "எங்களுடைய பெண் நெறியாளர் தாலிபன்கள் செய்தித்தொடர்பாளரை நேர்காணல் கண்டார்" என ட்வீட் செய்திருந்தார்.
இதற்கிடையில் தாலிபன்களின் கலாசார பிரிவின் உறுப்பினர், ஆப்கான் அரசில் பணிபுரிந்தவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதாகவும், பெண்கள் தங்கள் அரசில் இணையவேண்டும் எனவும் கோரியிருந்தார்.
"இஸ்லாமிக் எமிரேட் (ஆப்கானிஸ்தானுக்கு தாலிபன்கள் சூட்டிய பெயர்) பெண்கள் பாதிக்கப்படுவதை விரும்பவில்லை. அரசாங்கத்தின் அமைப்பு முழுமையாக தெளிவாகவில்லை. ஆனால், அனுபவத்தின் அடிப்படையில், இஸ்லாமிய தலைவர்களின் தலைமைகளின் கீழ் அரசாங்கம் அமைக்கப்படும். இதில், எல்லா தரப்பினரும் இணையவேண்டும்" எனப் பேசியிருந்தார்.
தாலிபன்களின் ஆட்சியில் பெண்கள்
தாலிபன்கள் முதன் முறையாக ஆப்கானிஸ்தானை ஆண்ட 1996-2001 வரையிலான காலகட்டத்தில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள், அவர்களது தவறான கருத்துகள் ஆகியவை சர்வதேச சமூகத்தின் பார்வைக்கு வந்தது.
ஆப்கானிஸ்தானில் பொதுவெளியில் பெண்கள் புர்கா அணிய கட்டாயப்படுத்தப்பட்டனர். "பெண்ணின் முகம் ஆண்களை தவறு செய்யதூண்டும்" என்பது தாலிபன்களின் கருத்து. பெண்கள் வேலைக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை, எட்டு வயதுக்கு மேல் அவர்கள் குரானைத் தவிர வேறு எவற்றையும் கற்க அனுமதிக்கவில்லை.
குடும்ப உறுப்பினர்களுடன் மிதிவண்டி, இருசக்கர வாகனம் ஓட்டவும் அவர்களுக்குத் தடை இருந்தது. ஆண்களும், பெண்களும் ஒரே பேருந்தில் பயணம் செய்வதைத் தடுக்க தனித்தனி பேருந்துவசதிகள் ஏற்படுத்தப்பட்டன.
மருத்துவமனைகளில், ஆண் மருத்துவர்கள் பெண்களுக்கு சிகிச்சையளிக்க தடைவிதிக்கப்பட்டது. இதன்விளைவாக, பெண்கள் தங்கள் சிகிச்சைக்கு வெகுதூரம் செல்லவேண்டியிருந்தது.
ஆப்கானியர்களின் கருத்து
தற்போது தாலிபன்கள் ஆட்சியை கைப்பற்றியிருக்கும் வேளையில், மக்களிடையே பீதியும் குழப்பமும் நீடிக்கிறது. இதன்விளைவாக பல்வேறு மக்கள வேறு நாடுகளுக்கு தப்பிச்செல்ல விமான நிலையங்களில் குவிந்துவருகின்றனர்.
தாலிபன்களின் கலாசார பிரிவின் தலைவர் எனமுல்லா சமங்கனி, டி.ஓ.எல்.ஓ செய்தி தொலைக்காட்சியில் கொடுத்த நேர்காணலில், “இன்னும் நிறைய மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் செய்யவிருக்கிறோம்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வார்த்தைகளை அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ளமுடியாது என்கிறார் 2019ஆம் ஆண்டு முதல் டெல்லியில் ஒரு ஆப்கானியர். சில நாடுகள், ஐநா மன்றத்தின் அங்கீகாரத்திற்காக சில விஷயங்களைச் செய்வதில் தாலிபன்கள் தந்திரமானவர்கள் எனவும், அதன்பிறகு அவர்கள் தங்களுடைய உண்மை முகத்தை காட்டுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க:20 ஆண்டுகளுக்கு பின் தாலிபன்களிடம் வீழ்ந்த ஆப்கானிஸ்தான்!